நிர்வாக சேவையின் சமில ஜயசிங்க கைது செய்யப்பட்டதானது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் ஒரு புதிய வடிவமாகும்.
முகப்புத்தகத்தில் ஒரு பதிவை பகிர்ந்தது குறித்து விசாரிப்பதற்காக குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சமில இந்திக ஜயசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக சுதந்திர ஊடக இயக்கம் காண்கிறது.
பாதிக்கப்பட்ட சமில ஜயசிங்க, அவரது கைது தன்னிச்சையானது மற்றும் பலவந்தமானது என்றும் அவரது முகப்புத்தக கணக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவு, பொது அமைதியின்மையை ஏற்படுத்தியதாகக் கூறி, அவரதும் அவரது மனைவியினதும் கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அரசாங்க அதிகாரிகளுக்கு கருத்து தெரிவிப்பதிலிருந்தும் விமர்சிப்பதிலிருந்தும் விலகியிருக்கச் செய்ய விடுக்கப்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞையாக பார்க்கும் சுதந்திர ஊடக இயக்கம், இது சைபர் கிரைம் வகைப்பாட்டின் கீழ் முறைப்பாடு பதியப்பட்டிருப்பது அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக கருதப்பட வேண்டும் என்று நம்புகிறது.
கொத்மலை காணி உரித்துகள் நிர்ணயத் திணைக்களத்தில் உதவி ஆணையராக சேவைப் புரிந்த சமில ஜயசிங்க மே 21 ஆம் தேதி கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்குச் சென்ற வேலை கைது செய்யப்பட்டுள்ளார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120 ன் கீழ் ‘அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர், மே 22 ஆம் தேதி கொழும்பு 7ம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதவான் திரு T.K. பிரபாகரன் அவரை ஜாமீனில் விடுவித்தார். அவரை ரிமாண்ட் காவலில் வைக்க வேண்டும் என்ற போலீசாரின் கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
ரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள சகல உரிமையையும் அனுபவிக்கும் உரிமை அரச ஊழியர்களுக்கு இருக்க வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுகிறது. இது ‘பொது அமைதியின்மையை ஏற்படுத்துவதாக’ கூறி, அரச ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு இதுபோன்ற சட்டத்தைப் பயன்படுத்துவதானது, நல்லாட்சியை மேம்படுத்துவதில் பங்களிப்பதில் இருந்து அரச ஊழியர்களை அந்நியப்படுத்த வாய்ப்புள்ளது, நல்லாட்சியை கொண்டுசெல்ல இது ஒரு முக்கிய காரணியாகும். எனவே , இதுபோன்ற சம்பவம் சமூகத்தால் வெறுக்கத்தக்கது என்று சுதந்திர ஊடக இயக்கம் கண்டிக்கிறது.